தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து தனக்கு தானே கல்லறை கட்டி கல்லறை அருகிலேயே வாழ்ந்து வந்த பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி(வயது 65).
திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் ரூ. 50 ஆயிரம் செலவில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார்.
கான்கிரீட் மூலம் கட்டப்பட்ட இந்த கல்லறையில் கிரானைட் பதிக்கப்பட்டு, சிலுவை, அவர் முகம் பதித்த தகடு ஆகியவை உள்ளன.
எவருக்கும் பாரமாக இருக்ககூடாது என்பதற்காக எனக்கான கல்லறையை இவர் கட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment