தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் எச்1என்1 காய்ச்சல்: சிகிச்சை முறைகள் வெளியிட்டது சுகாதாரத்துறை
சென்னை: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் சிகிச்சை முறைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார்.
இதில் இந்த காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல் , தலைவலி, மூக்கடைப்பு மற்றும் உடல் வலி , உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அனைத்து மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் , கர்ப்பிணிகள் , 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் , தீவிரமான சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள் , நீரழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த வகை பாதிப்புடன் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை , ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைதல் ஆகிய பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் இன்ஃப்ளூவென்சா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
குழந்தைகளிடம் அதிக பாதிப்பு: முன்னதாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், " தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். வருடா வருடம் பருவ மழைக் காலங்களில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் இரண்டு வருடமாக முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றியதன் காரணமாக இக் காய்ச்சல் தொற்று பரவல் குறைவாக இருந்தது.
ஆனால் தற்போது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டதன் காரணமாக பருவமழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குழந்தைகளுக்கிடையே பரவி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு நடத்தினோம். இங்கு 121 குழந்தைகள் காய்ச்சலால் சிகிச்சை பெறுகிறார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை" என்று கூறினார்.
No comments:
Post a Comment