ஒரு வருடமாக கஷ்டப்பட்டு 7 வயது மகனுக்காக சிறிய motor bike மெக்கானிக் வடிவமைத்தார். அதனை சாலையில் ஓட்டிச்சென்ற வீடியோ வைரலானது.
ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி நாச்சினம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவர், மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும், மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுவர்கள் ஓட்டக்கூடிய பேட்டரி மோட்டார் சைக்கிளை பார்த்து தங்கராஜிடம் அவரது மகன் மோகித் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டுள்ளான். மோட்டார் மெக்கானிக்கல் அனுபவமுள்ள தங்கராஜ் தானே தனது மகனுக்கு 'ரேஸ் பைக்' வடிவிலான மொபட்டை தயாரித்து தர முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழைய மொபட்டை விலைக்கு வாங்கி கஷ்டப்பட்டு அதனை சிறுவர்கள் ஓட்டும் வகையில் வடிவமைக்க தொடங்கினார். அதன்பிறகு 'ரேஸ் பைக்' வடிவிலான சிறிய மொபட் தயாரித்து அதனை தனது மகனுக்கு பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில், ஓமலூர் அருகே சாலையில் சிறுவன் மோகித் மொபட்டை ஓட்ட அவரது தந்தை தங்கராஜ் பின்னால் அமர்ந்து சோதனை ஓட்டம் சென்று பார்த்தனர். இதை அவர்களது உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதே விதிமுறை மீறலாகும். ஆனால் சிறுவன் மொபட் ஓட்டுவதற்கு அவரது தந்தையே உறுதுணையாக இருந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து மோட்டார் சைக்கிள் மெக்கானிக் தங்கராஜ் கூறும் போது, 'சிறுவர்கள் ஓட்டும் வகையில் சிறிய வடிவிலான மொபட் தயாரித்துள்ளேன். இதனை சாலையில் ஓட்ட அரசு மற்றும் போக்குவரத்து துறையினர் அனுமதி தர வேண்டுமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால் மேலும் பல மொபட்டுகளை சிறுவர்கள் ஓட்டும் வகையில் தயாரிக்க முடியும். மகனுக்காக ஒரு ஆண்டு சிரமப்பட்டு உருவாக்கிய மொபட்டை தற்போது வீட்டில் பத்திரமாக வைத்துள்ளேன்' என்றார்.
No comments:
Post a Comment