10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலன் திருமணத்துக்கு 1 மாதத்துக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் காதலனின் பெற்றோருக்கு மகளாக இருந்து அவர்களது வீட்டில் பணிவிடை செய்து வருகிறார் ஒரு பெண்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி.
இவர்களுக்கு வெங்கடேசன், சபரி கிருஷ்ணன்(வயது 26), சந்தோஷ் பாபு ஆகிய 3 மகன்கள்.
மூத்த மகன் வெங்கடேசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து அவர் தனியாக வசித்து வருகிறார்.
இரண்டாவது மகன் சபரிகிருஷ்ணன் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.
இவரும், இவரது உறவினருமான மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியுமான 24 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண்ணும் கடந்த10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி சபரி கிருஷ்ணன் – ரேவதிக்கு திருணம் நடைபெற இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஜூலை மாதம் பணியில் இருந்தபோது சபரி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.
திருமணத்திற்கு சில வாரங்களே இருந்த நிலையில் மணமகன் சபரி கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
தங்களது மகனை இழந்த பெரும் சோகத்தில் இருந்த கோவிந்தராஜ் – பத்மாவதி தம்பதி செய்வதறியாது திகைத்து நிற்க, மணப்பெண் ரேவதி அவர்களது மகளைப்போல அங்கேயே தங்கி பணிவிடைகளை செய்யத் துவங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பத்மாவதி,”சபரி இறந்த அன்று ரேவதி எங்களது வீட்டிற்கு வந்தார்.
அனைத்து சடங்குகளும் முடிவடையும் வரையில் இங்கேயே இருந்த ரேவதியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
ஆனால், சில நாட்களிலேயே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரேவதியை மீண்டும் எங்களது வீட்டிற்கே அழைத்துவந்து விட்டுச் சென்றனர் அவரது பெற்றோர்.
அவரின் மூலமாக என்னுடைய மகனை பார்க்கிறேன்” என கவலையுடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சபரி கிருஷ்ணன் இறந்தபோது, 3 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக தருவதாகவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மின்சார வாரியம் அறிவித்திருந்ததாக கூறும் சபரி கிருஷ்ணனின் சகோதரர் வெங்கடேஸ்வரன் இதுவரையில் எவ்வித உதவியும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.
10 ஆண்டுகளாக காதலித்துவந்த காதலன் திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டதால், அவரது குடும்பத்தில் ஒருவராகவே இளம்பெண் வாழ்ந்துவருவது பலரையும் சோகம் கலந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment